Thursday, December 26, 2019

131. புலவி


131. புலவி
புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.               (1301)
தலைவியே! நீ விரைந்து சென்று காதலரைத் தழுவாது இக்கரணியத்தை மேலிட்டுக் கொண்டு புலப்பாயாக. அங்ஙனம் புலந்தால் அவர் அடையும் துன்பநோயைச் சற்றுக் கண்டு களிப்போம்.
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.                      (1302)
புலவி கலவி இன்பஞ் செய்தற்கு வேண்டிய அளவாயிருத்தல், உப்புச் சமைத்த உணவு இன்சுவை ஆதற்கு வேண்டும் அளவினதாயிருத்தல் போலும். இனி, அப்புலவியை அவ்வளவினுஞ் சிறிது மிக விடுதல் அவ் வுப்பு அளவிற்கு மிஞ்சினாற் போலும்.
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.                   (1303)
தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக் கலவாது ஆடவர் விட்டுவிடுதல் முன்னமே துன்பம் உற்று அழிந்தாரை அதன் மேலுந் துன்புறுத்தினாற் போலும்.
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.                       (1304)
நும்மோடு ஊடிய பரத்தையரை ஊடல் தீர்த்துக் கூடாது விடுதல் முன்பே நீர் பெறாது வாடிய கொடியை அடியில் அறுத்துவிட்டாற் போலும்.
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூவன்ன கண்ணார் அகத்து.                   (1305)
நற்குணங்களால் தகுதியுடைய நல்ல ஆடவர்க்கும் அழகாவது தம் மலர் போலுங் கண்களையுடைய மகளிரின் நெஞ்சில் நிகழும் புலவிச் சிறப் பன்றோ?
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.                   (1306)
முதிர்ந்த சடைவாகிய துனியும் அளவான சடைவாகிய புலவியும் இல்லா விடின் காம வின்பம் முறையே நன்றாகப் பழுத்த பழமும் பழுக்காத கன்னற் காயும் போல்வதாம்.
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.                     (1307)
இனிப் புணர்ச்சி காலந்தாழ்க்குமோ தாழ்க்காதோ என்று கருதுதலால் இன்பத்திற்கேதுவான ஊடலிலும் ஒரு துன்பமுள்ளதாம்.
நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்
காதலர் இல்லா வழி.                         (1308)
இவர் நம் செயல் பற்றி நொந்தார் என்று அந்நோவினை அறியும் அன்புடையார் இல்லாதவிடத்து ஒருவர் நொந்து என்ன பயன்?
நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.                      (1309)
உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத நீரும் நிழலடி உள்ளதே குளிர்ந்து இன்பந் தரும். வெயிலிற் காய்ந்தது இன்பந் தராது. அதுபோலக் கலவி யின்பத்தை மிகுக்கும் புலவியும் அன்புடையாரிடத்தே இன்பத்திற்கு ஏதுவாகும். அன்பிலாரி டத்தோ துன்பத்திற்கே ஏதுவாகும்.
ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்
கூடுவேம் என்ப தவா.                         (1310)
ஊடல்கொண்ட போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாடவிடுகின்ற வரோடு என் உள்ளம் கூடி இன்புறுவேம் என்று கருதுகிறதற்குக் கரணி யம் அதன் ஆசையே யன்றி வேறன்று.






No comments:

Post a Comment