Thursday, December 26, 2019

132. புலவி நுணுக்கம்

132. புலவி நுணுக்கம்


பெண்ணியலார் எல்லாருங் கண்ணின் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு. (1311)

பரத்தமை உடையாய்! பெண்தன்மை உடையவர் எல்லாரும் தம் கண் ணாற் பொதுவாக நுகர்வர். ஆதலால், அவர் நுகர்ந்த எச்சில் ஆகிய உன் மார்பைப் பொருந்தேன்.

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து. (1312)

யாம் தம்மோடு உரையாடாமல் இருந்தேமாகக் காதலர் தும்மினார். அது எதற்கு எனின், யாம் ஊடல் நீங்கித் தம்மை நீடுவாழ்க என்று வாழ்த்தி உரையாடுதற்கு.

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று. (1313)

இம்மருத நிலத்து நீர்ப்பூவும் கொடிப்பூவும் அன்றி வேற்று நிலத்துக் கோட் டுப் பூவைச் சூடினேன் ஆயினும் “நும்மாற் காதலிக்கப்பட்ட வேறு ஒருத் திக்கு இப்பூவணியைக் காட்டல் வேண்டிச் சூடினீர்” என்று சீற்றங்கொள் வாள் என் காதலி. இத்தகை யாளுக்கு ஒரு கரணகமும் வேண்டுமோ?

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று. (1314)

காம இன்பம் நுகர்தற்கு உரிய இருவராகிய கணவன் மனைவியர் வேறு யாரினும் நாம் மிகுந்த காதலுடையோம் என்னும் பொருளில், “யாரினுங் காதலம்” என்று சொன்னேனாக, உன்தலைவி அப்பொருள் கொள்ளாது, என்னாற் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் உன்பால் மிகுந்த காதலு டையேன் என்று நான் கூறியதாகக் கொண்டு, “யாரைவிட யாரைவிட” என்று வினவிப் புலந்தாள்.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள். (1315)

காதல் மிகுதியால் “இப்பிறப்பில் நாம் ஒருபோதும் பிரியோம்” என்று கூறி னேனாக. அதனாற் மறுபிறப்பில் நான் பிரிந்து போவேன் என்று குறித்தா கக் கருதித் தன் கண் நிறையக் கண்ணீரைப் பெருக்கி விட்டாள்.

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள். (1316)

பிரிந்து போயிருந்த காலத்தில் உன்னை ஒரு போதும் மறவாது நினைத் திருந்தேன் என்னுங் கருத்தில் “உள்ளினேன்” என்றேன். உடனே அதை ஒருகால் மறந்திருந்து பின்பு நினைத்துக் கொண்டேன் என்று நான் கூறிய தாகக் கருதி, என்னை இடையே மறந்து விட்டீர் என்று சொல்லி, அதற்கு முன்பு என்னைத் தழுவுதற்கு இருந்தவள் அதைச் செய்யாது அன்றே புலவி மேற்கொண்டு விட்டாள்.


வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று. (1317)

என்னொடு கூட இருந்தவள் யான் தும்மினேனாக வழக்கம்போல் “நீடு வாழ்க” என்று வாழ்த்தினாள். அங்ஙனம் வாழ்த்தியவளே தன் கருத்தை மாற்றி, நும்மாற் காதலிக்கப்பட்ட மகளிருள் யார் நினைத்ததனால் தும் மினீர் என்று சொல்லி அழுதாள்.

தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று. (1318)

எனக்குத் தும்மல் தோன்றியபோது, என் காதலி “யார் உள்ளித் தும்மினீர்” என்று புலத்தல் அஞ்சி அதனை அடக்க, நும் காதலிமார் நும்மை நினைத் தலை எனக்கு மறைக்கின்றீரோ என்று சொல்லி அழுதாள்.

தன்னை உணர்த்தினுங் காயும் பிறர்க்குநீர்
இந்நீரர் ஆகுதிர் என்று. (1319)

இவ்வகையிற் கரணகம் இன்றி ஊடிய தன்னை யான் பணிந்துரைத்து ஊடல் தீர்க்குங்காலும் பிற மகளிர்க்கும் நீர் அவர் ஊடிய விடத்து இவ் வாறே பணிந் துணர்த்துந் தன்மையை உடையீர் ஆகுதிர் என்று சினங் கொள்வாள்.

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று. (1320)

நான் என்ன சொல்லினும் என்ன செய்யினும் அவற்றிற் குற்றங் காணு தலால் அவற்றை ஒழிந்திருந்து, தன் உறுப்புக்களின் ஒப்பிலா அழகை நினைந்து அவற்றையே வியந்து நோக்கினும், என்னை சினந்து கொள் வாள்,“என் உறுப்புக்கள் எல்லாவற்றையும் நோக்கினீர், அவற்றின் ஒப்பு மையால் எம் மகளிரை நினைந்து?” என்று வினவி.

No comments:

Post a Comment