Thursday, December 26, 2019

133. ஊடலுவகை


133. ஊடலுவகை

இல்லை தவறவர்க காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கு மாறு. (1321)

காதலர்பால் தவறு இல்லை ஆயினும் அவர் நம்மொடு செய்யும் பேரின் பக் கூட்டம் இங்ஙனம் அவரொடு ஊடுதலை விளைக்கும் வலிமை உள்ள தாக இருக்கின்றது.

ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும். (1322)

ஊடல் கரணகமாக என்கண் தோன்றும் சிறு சடைவினால் காதலர் செய்யும் நல்ல தலையளி சற்று வாடுமாயினும் பின்பு பெருமை பெறும்.

புலத்தலின் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து. (1323)

நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலரொடு புலத்தல் போல் நமக்கு இன்பந் தருவதொரு தேவருவகம் எங்கேனும் உண்டோ? இல்லை.

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை. (1324)

காதலரைத் தழுவிக்கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக் கண்ணே அதை மேற்கொண்ட என் உள்ளத்தைத் தகர்க்கும் படைக்கலம் உண்டாகும்.

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து. (1325)

ஆடவர் தம்மிடத்துத் தவறு இல்லாதவர் ஆயினும் உடையார்போல ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களினின்று சிறிது போழ்து நீங்கியிருத்தலால் அவ்வூடல் அவர்க்கு அத்தகையதோர் இன்பம் பயத்தல் உடையது.

உணலினும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது. (1326)

மாந்தர்க்கு உணவுத்துறையில், பின் உண்பதினும் முன் உண்டது செரித்தல் இன்பந் தருவதாம். அதுபோல அவர்க்குக் காமவின்பத் துறையில், மேற்புணர்வ தினும் முன்னைத் தவறு பற்றி மகளிர் ஊடுதல் இன்பந் தருவதாம்.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலின் காணப் படும். (1327)

ஊடலில் தோற்ற மகளிர் வென்றவர் ஆவர். அவ்வெற்றி மிகுதியும் பின்னர்ப் புணர்ச்சிக்கண் அவரால் அறியப்படும்.

ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு. (1328)

இதுபோது இவள் நெற்றி வெயர்க்கும் அளவு செய்த கலவியின்கண் உள்ள இனிமையை இன்னும் ஒருகால் இவள் ஊடி யாம் பெற ஒண் ணுமோ!

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா. (1329)

ஒளி வீசும் அணிகலன்களை உடையாள் இன்னும் எம்மோடு மிகுதியும் ஊடுவாளாக. அவள் அங்ஙனம் ஊடுதற்கு யாம் அதை உணர்த்தும் பொருட்டு அவளை இரந்து நிற்றற்கும் போதிய அளவு காலம் இருக்கும் வகை இவ்விரவு மிகுதியும் நீடுவதாக.

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். (1330)

காம நுகர்ச்சிக்கு இன்பமாவது, நுகர்தற்கு உரிய காதலன் காதலி ஆகிய இருவருட் காதலி காதலன்பாற் குற்றம் உள்ள விடத்தும் இல்லா விடத் தும் அவனொடு ஊடுதல்; அவ்வூடுதற்கு இன்பமாவது அதனை அளவு அறிந்து நீக்கிக் காதலன் காதலி இருவரும் தம்முட் கூடித் தழுவப் பெறின் அத்தழுவல்.

No comments:

Post a Comment